
ஜோகூர் பாரு, ஏப்ரல்-9, பெண்களின் புகைப்படங்களை AI உதவியுடன் ஆபாசமாக எடிட் செய்து அவற்றை சமூக ஊடகங்களில் தலா 2 ரிங்கிடுக்கு விற்று காசு பார்த்து வந்த சந்தேகத்தில், 16 வயது பையன் கைதாகியுள்ளான்.
ஜோகூர் கூலாய் சுற்று வட்டாரத்தில் நேற்று மாலை 5 மணிக்கு அவன் கைதானதை, மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் உறுதிப்படுத்தினார்.
ஆபாச புகைப்படத்தில் தனது முகத்தை ஒட்ட வைத்து எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானதாக, பாதிக்கப்பட்ட பெண் முன்னதாக போலீஸில் புகார் செய்தார்.
வலைத்தளவாசிகளுக்கு அப்படங்கள் விற்கப்படுவதையும் தாம் கண்டறிந்ததாக 18 வயது அப்பெண் கூறியிருந்தார்.
இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸார் அவனைக் கைதுச் செய்தனர்.
புகைப்படங்களை ஆபாசமாக எடிட் செய்யவும் அவற்றை சமூக ஊடகங்களில் பதிவேற்ற அவன் பயன்படுத்திய கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
தனது சமூக ஊடகப் பக்கத்திலிருந்து மற்றவர்களின் புகைப்படங்களை எடுத்து, அவர்கள் நிர்வாணமாக இருப்பது போல் AI அதிநவீன தொழில்நுட்ப செயலியில் எடிட் செய்து வந்ததை அவன் போலீஸிடம் ஒப்புக் கொண்டான்.
அதே சந்தேக நபரால் பாதிக்கப்பட்ட மேலும் 8 பேர் அவனுக்கெதிராக போலீஸில் புகார் செய்திருப்பதையும் டத்தோ குமார் உறுதிப்படுத்தினார்.
மேற்கொண்டு விசாரிக்கப்பட ஏதுவாக ஏப்ரல் 12-ஆம் தேதி வரை அவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.
அவனால் பாதிக்கப்பட்ட மற்றவர்களும் முன் வந்து புகாரளிக்குமாறு குமார் கேட்டுக் கொண்டார்.
கூலாயில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியின் மாணவியின் புகைப்படங்கள் ஆபாசமாகவும் அநாகரீகமாகவும் எடிட் செய்யப்பட்டு முன்னதாக பல்வேறு சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.