வாஷிங்டன், செப்டம்பர்-19, அமெரிக்காவின் Maryland மாநிலத்தின் பரபரப்பு மிக்க Baltimore துறைமுகத்தின் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில், சிங்கப்பூரைச் சேர்ந்த சரக்குக் கப்பலின் உரிமையாளரிடமிருந்து அமெரிக்கா 100 கோடி டாலருக்கும் மேல் இழப்பீடு கோரியுள்ளது.
பாலத்தின் அழிவுக்குக் காரணமானவர்கள் அதற்கு முழு பொறுப்பேற்றே ஆக வேண்டுமென, இழப்பீட்டு மனுவில் அமெரிக்க நீதித் துறை குறிப்பிட்டுள்ளது.
சேதங்களின் துப்புரவுப் பணிகளுக்கும், பாலத்தின் மறுகட்டுமானத்திற்கும் ஆகும் செலவுகளை, விபத்தை ஏற்படுத்திய நிறுவனம் ஏற்க வேண்டுமே ஒழிய, வரி கட்டும் அமெரிக்கர்கள் அல்ல என அத்துறை திட்டவட்டமாகக் கூறியது.
மார்ச் 26-ஆம் தேதி சிங்கப்பூர் கொடியுடன் வந்த அந்த சரக்குக் கப்பல் மோதியதில், 2.7 கிலோ மீட்டர் நீளமுள்ள பாலத்தின் பெரும் பகுதி இடிந்து ஆற்றில் விழுந்தது.
இதனால் பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த டிரேய்லர் உட்பட பல வாகனங்களும், பாலத்தோடு சேர்ந்து நீரில் விழுந்தன.
அதில் கட்டுமானத் தொழிலாளிகளான 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.