
கோலாலாம்பூர், ஜூலை-16- ஸ்ரீ கெம்பாங்கான் நோக்கிச் செல்லும் BESRAYA நெடுஞ்சாலையில் நேற்று 4 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கு, காரொன்றின் காற்றுப் பை திடீரென திறந்துகொண்டு காரோட்டுநரின் பார்வையை மறைத்ததே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
மாலை 4.15 மணியளவில் ஏற்பட்ட அவ்விபத்தில் Toyota Mark X, Perodua Myvi, Honda BRV மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்டதாக, கோலாலாம்பூர் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வு மற்றும் அமுலாக்கப் பிரிவின் தலைவர் Mohd Zamzuri Mohd Isa கூறினார்.
சாலையின் வலப்புறத்தில் சென்ற 33 வயது ஓட்டுநரின் Toyota கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத் தடுப்பை மோதி, பின்னர் நடுப்பாதைலிருந்த Perodua Myvi-யின் பின்னால் மோதியது.
மோதிய வேகத்தில் அதன் பாதுகாப்புக் காற்றுப் பை திறந்துகொண்டு, காரோட்டியின் பார்வையை மறைத்துள்ளது; இதனால் அக்கார் ஒரு மோட்டார் சைக்கிளையும் Honda BRV காரையும் மோதியது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
அதில் மோட்டார் சைக்கிளோட்டியும், பின்னால் அமர்ந்திருந்த ஆடவரும் காயமடைந்து செர்டாங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Toyota Mark X காரோட்டுநரிடம் சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டதில், அவர் போதைப் பொருள் எதுவும் உட்கொண்டிருக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
நேற்றைய அவ்விபத்தின் dash cam காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வலைத்தளவாசிகளிடையே பல்வேறு கருத்துகளைப் பெற்று வருகிறது.