
கோலாலம்பூர், டிசம்பர் 18 – மாதத்திற்கு 2,000 கிலோமீட்டருக்கு குறைவாக பயணம் செய்யும் இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள், Budi Madani RON95 (Budi95) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூடுதல் பெட்ரோல் ஒதுக்கீட்டிற்கு தகுதி பெறமாட்டார்கள் என்று இரண்டாம் நிதி அமைச்சர் Datuk Seri Amir Hamzah Azizan தெரிவித்தார்.
முந்தைய மாதத்தில் இ-ஹெய்லிங் நிறுவனங்கள் (EHO) பதிவுசெய்த பயணத் தூரத்தின் அடிப்படையில் 2,000 கிலோ மீட்டருக்கும் குறைவாக பயணம் செய்தவர்கள் 300 லிட்டர் அடிப்படை ஒதுக்கீடு மட்டுமே பெறுவார்கள்.
2,000 முதல் 5,000 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் மேற்கொள்பவர்களுக்கு 600 லிட்டர் கூடுதல் ஒதுக்கீடும், 5,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்தவர்கள் 800 லிட்டர் வரையிலான கூடுதல் ஒதுக்கீட்டையும் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தவறான அல்லது சந்தேகத்திற்கிடமான தரவுகளை சமர்ப்பிப்பவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முழுநேர ஓட்டுநர்களுக்கு மட்டுமே இந்தச் செயல்முறை அமலாக்கம் செய்யப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
பதிவு செய்யப்பட்ட 1.64 லட்ச ஓட்டுநர்களில் 65 விழுக்காட்டினர் 600 முதல் 800 லிட்டர் வரை ஒதுக்கீட்டிற்கு தகுதி பெற்றுள்ளனர். செல்லுபடியாகும் PSV உரிமம் மற்றும் இ-ஹெய்லிங் அனுமதி கொண்ட மலேசிய ஓட்டுநர்களே தகுதி பெறுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.



