
கோலாலம்பூர், செப்டம்பர் -19,
நாட்டின் எல்லை பகுதிகளில் நடைபெற்ற ‘counter setting’ எனப்படும் ஊழல் மற்றும் ஒழுங்கு மீறல் செயல்களில் ஈடுபட்ட 20 குடிநுழைவு (Imigresen) அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 227 அதிகாரிகள் இதே குற்றச்சாட்டில் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டு முதல் கடந்த புதன்கிழமை வரை, மேற்கண்ட ஊழலில் குற்றவாளியாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட அனைவரும், உள்துறை விசாரணையிலும் தவறு செய்தது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்று குடிநுழைவு துறை தலைமை இயக்குநர் சகாரியா ஷாஹ்பான் (Zakaria Shaaban) தெரிவித்தார்.
பணி நீக்கம் செய்யப்பட்ட 20 பேரில் மேலாண்மை மற்றும் தொழில்முறை பிரிவைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்படவில்லை என்றும் , அவர்களின் வழக்குகள் பொதுச்சேவை துறைக்கு (JPA) அனுப்பப்பட்டுள்ளன என்றும் அறியப்படுகின்றது.
பணி நீக்கம் செய்யப்பட்ட 20 பேரும், விசாரணையில் உள்ள 227 பேரும் முன்பு KLIA, புலாவ் பினாங்கு, புக்கிட் காயு ஹித்தாம், ஜோகூர் சுல்தான் இஸ்கண்டார் வளாகம் (BSI) போன்ற முக்கிய எல்லை பகுதிகளில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு முதல், எல்லை பகுதிகளில் பணிபுரியும் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள் தங்களின் சொத்து விவரங்களை கட்டாயம் அறிவிக்க வேண்டும் என விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.