
கல்வி ஒன்றே நம் சமுதாயம் முன்னேற ஒரே வழி எனும் தாரக மந்திரத்தைக் கொண்டு IPTA my choice திட்டம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல இந்திய இளைஞர்கள் பொது பல்கலைக்கழகம் சேர வழிகாட்டி வருகிறது CUMIG எனப்படும் மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய பட்டதாரிகள் அமைப்பு.
பல தலைமுறைகளைச் சேர்ந்த இந்திய பட்டதாரிகள் ஒன்றுகூடும் விழாவாக அதன் ஆண்டு விழா அண்மையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
ஆறாவது ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில் 1960, 1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த மலாயா பல்கலைக்கழகத்தின் மூத்த இந்திய பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் முத்தாய்ப்பாக கல்வி வழி முன்னேறியது மட்டுமின்றி பொது தொண்டும் ஆற்றிவரும் 10 முன்னாள் பட்டதாரிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
மலேசிய பல் மருத்துவ சங்கம் தனியார் பிரிவின் தலைவர் டாக்டர் நெடுஞ்செழியன் வேங்கு, முன்னாள் சிலாங்கூர் போலீஸ் துணைத் தலைவர் டத்தோ சசிகலா தேவி சுப்பிரமணியம், பூஜாங் பள்ளத்தாக்கு குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்ட டத்தோ நடராஜன் வீரையா, மலாயாப் பல்கலைக்கழக விரிவுரையாளர் மன்னார் மன்னன், இளம் வயதில் ஒரு நிறுவனத்தை தொடங்கி அதனை வெற்றிகரமாக நடத்தி வரும் டாக்டர் சக்திவேல் உட்பட கல்வி, பொருளாதாரம், சமூக அடையாளம், கலாசாரப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கி வரும் மொத்தம் 10 பேருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மலாயா பல்கலைக் கழகத்தின் இந்திய பட்டாரிகள் அமைப்பின் இந்த ஆண்டு நிகழ்வு, தலைமுறைகளை இணைக்கும் பாலமாகவும் மற்றும் எதிர்கால தலைவர்களை உருவாக்கும் தளமாகவும் அமைந்திருந்தது. CUMIQன் திட்டங்கள் மூலம் பல ஆயிரம் இந்திய இளைஞர்கள் பயனடைந்துள்ளதோடு, வரும் டிசம்பர் மாதம் திரட்டப்பட்டிருக்கும் கல்வி நிதி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அதன் தலைவர் தனசேகர் ராமசாமி தனதுரையில் கூறினார்.
இதனிடையே CUMIG அமைப்பின் உதவித் தலைவர் ஸ்ரீ கணேஸ் ஜனார்தனன் மற்றும் நல்லெண்ண தூதரக பணியாற்றிவரும் யுகேஸ்வரி சுப்பையா ( Yugeshwar R . Supayah ) ஆகியோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
மலாயா பல்கலைக் கழகத்தின் மூத்த பட்டதாரிகளில் ஒருவரும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்ட வரலாற்று ஆய்வாளரான வழக்கறிஞர் டத்தோ நடராஜன் வீரையாவும் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார்.
இந்திய பட்டதாரிகள் மற்றும் சமுதாயஇணைக்கும் இந்திய சமூகத்தின் கல்வி, சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு பெரும் துணையாகவும் ஒத்துழைப்பாகவும் மலாயா பல்கலைக்கழகத்தன் இந்திய பட்டதாரிகள் அமைப்பு தொடர்ந்து செயல்படும் என்பதற்கான சிறந்த அடித்தளத்தையும் நம்பிக்கையையும் அதன் ஆண்டு விழா நிருபித்திருக்கிறது.



