
கோலாலம்பூர், ஜனவரி-16-DAP-க்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ள அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ Dr அக்மால் சாலேவிடம் அது குறித்து விளக்கம் பெறப் போவதாக, கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.
நேற்றைய அம்னோ இளைஞர் பிரிவு மாநாட்டில், மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறித்த அக்மால், இனி DAP-யை எதிர்த்து இறுதி வரை போராடப் போவதாக சூளுரைதார்.
அம்னோ-DAP இரண்டுமே ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றிருப்பதால், அவரின் இப்பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து கருத்துரைத்த துணைப் பிரதமருமான சாஹிட், “அக்மால் யாரைத் ‘தாக்கப் போகிறார், எதை தாக்கப் போகிறார்” என்பதை அவரிடமே விளக்கம் பெறுவேன்” என்றார்.
அக்மாலின் பதவி விலகல், அம்னோ ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு கொடுக்கப்படும் அழுத்தம் என்பதையும் சாஹிட் மறுத்தார்.
“அது அவரது தனிப்பட்ட முடிவு; அரசுப் பணியில்லாமல் இனி கட்சிப் பணிகளில் அக்மால் அதிகம் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும்” என்றார் அவர்.
DAP ‘எல்லை மீறி விட்டதாகவும்’ எனவே அம்னோ ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டுமெனவும் கடந்த வாரம் இளைஞர் பிரிவின் சிறப்பு மாநாட்டைக் கூட்டி அக்மால் பேசியிருந்தார்.
ஆனால் அதனை நிராகரித்த சாஹிட், முழு தவணை முடியும் வரை அம்னோ ஒற்றுமை அரசாங்கத்தில் நீடிக்கும் என அறிவித்தார்.
இதனால் அதிருப்தியுற்ற அக்மால் பதவி விலகப் போவதாக வதந்திகள் கிளம்பிய நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது.
ஆனால், இளைஞர் பிரிவுத் தலைவர் பதவியை அவர் இன்னும் வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்து.



