Latestமலேசியா

DSK குழுமத்தின் ஏற்பாட்டில் பத்து மலையில் இலவச தேவார, சமய, பரத, நாதஸ்வர வகுப்புகள் தொடக்கம்

கோலாலம்பூர், ஜனவரி-12, பத்து மலை திருத்தலத்தில் உள்ள விநாயகர் கோயில் மண்டபத்தில் DSK குழுமத்தின் ஏற்பாட்டில் இலவச தேவார, சமய, பரத, தவில், நாதஸ்வர பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன.

முற்றிலும் இலவசமான அவ்வகுப்புகளை, DSK குழுமத்தின் தலைவரும் MAHIMA எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவருமான டத்தோ என். சிவக்குமார் நேற்று தொடக்கி வைத்தார்.

மாணவர்களுக்கு சமய மற்றும் கலாச்சார வகுப்புகளை இலவசமாக வழங்கும் நோக்கில் DSK முயற்சியில் 2022-ஆம் ஆண்டு 100 மாணவர்களுடன் தேவார வகுப்புத் தொடங்கப்பட்டது.

பிறகு 250 மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் தேவாரப் போட்டியும் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்டது.

இரு நிகழ்ச்சிகளுக்கும் கிடைத்த பேராதரவின் அடிப்படையில், அம்முயற்சிகளின் அடுத்தக் கட்டமாகத் தான் இந்த இலவச வகுப்புகள் தொடங்கியுள்ளதாக டத்தோ சிவக்குமார் சொன்னார்.

3 மாத கால இப்பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க வயதுக் கட்டுப்பாடு இல்லை.

இவ்வகுப்புகள் அனைத்தும் பத்து மலையில் விரைவில் திறப்பு விழா காணவிருக்கும் இந்தியக் கலாச்சார மையத்தில் நடைபெறவுள்ளன.

இது போன்ற வகுப்புகளை நடத்துவதன் மூலம் நமது பாரம்பரியத்தையும் சமயத்தையும் தொடர்ந்து கட்டிக் காக்க முடியுமென, டத்தோ சிவக்குமார் தமதுரையில் கூறினார்.

இப்பயிற்சி வகுப்புகளில் அனைவரும் பங்கேற்று பயனடையுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!