
பெய்ஜிங், செப்டம்பர் 3 – தாய்லாந்து எல்லையோரமுள்ள கிளந்தானின் ரந்தாவ் பஞ்சாங்கிற்கு கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பை (ECRL) நீட்டிக்கும் திட்டம் இன்னும் ஆரம்பக் கட்ட விவாதத்தில் உள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
திட்டத்தின் முழுமையான விவரங்கள், செலவுத்திட்டம் மற்றும் கட்டண முறை குறித்து குழு ஆய்வு செய்ய வேண்டும் என்பதனை அவர் தெளிவுப்படுத்தினார்.
இந்த விவகாரம் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கியாங் ஆகியோருடனான தனிப்பட்ட இருதரப்பு சந்திப்புகளில் விவாதிக்கப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
சுமார் 20 முதல் 25 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த நீட்டிப்பு திட்டம் அந்தப் பகுதியின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரச் சூழலை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், வரும் அக்டோபர் மாத இறுதியில் கோலாலம்பூரில் நடைபெறும் 47வது ஆசியான் மாநாட்டில் சீனாவை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பிரதமர் லி கியாங் வருவார் என்பதை பிரதமர் அன்வார் உறுதிப்படுத்தினார்.