
கோலாலாம்பூர், நவம்பர்-6,
மலேசிய உற்பத்தி சம்மேளமான FMM, சமூக பாதுகாப்பு நிறுவனமான PERKESO நிர்வகிக்கும் EIS எனப்படும் வேலைவாய்ப்பு காப்பீட்டு அமைப்பின் உத்தேச மாற்றங்களை வரவேற்றுள்ளது.
இந்த 2025 சட்டத் திருத்த மசோதா, நவம்பர் 4-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
புதிய மாற்றங்களில், பயிற்சி கட்டண வரம்பு RM4,000-லிருந்து RM7,000-மாக உயர்த்தப்படுவது, தினசரி பயிற்சிக்கு RM30 அலவன்ஸ் வழங்குவது, மற்றும் ஆரம்பகால மறுவேலைவாய்ப்பு அலவன்ஸ் தொகையை 25%-திலிருந்து 50%-தாக உயர்த்துவதும் அடங்கும்.
பணியிட மாற்றம் செய்யும் பணியாளர்களுக்கு மொபிலிட்டி அலவன்ஸ் எனும் புதிய உதவியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
FMM, இந்த மாற்றங்கள் தொழில்துறையின் எதிர்காலத் தயாரிப்பை மேம்படுத்தும் என பெரிதும் நம்புகிறது.
ஆனால், நிதி ஒழுங்கு மற்றும் நிர்வாகம் முக்கியம் எனவும், செலவிடப்படும் ஒவ்வொரு ரிங்கிட்டும் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும் எனவும் அச்சம்மேளனம் வலியுறுத்துகிறது.
அதோடு, EIS நிதியின் நீண்டகால நிலைத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், பங்களிப்பு விகித மாற்றங்கள் குறித்து எந்த முடிவும், தொழில்துறை மற்றும் பங்குதாரர்களுடன் முழுமையான ஆலோசனைக்குப் பிறகே எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கை வாயிலாக FMM அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது.



