
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-15- EPF எனப்படும் ஊழியர் சேமநிதி வாரியத்தின் மூன்றாவது கணக்கிலிருந்து மாதா மாதம் பணத்தை மீட்கும் முறை கடந்தாண்டு மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இதுவரை 4.6 மில்லியன் மலேசியர்கள் சுமார் 15 பில்லியன் ரிங்கிட் பணத்தை மீட்டுள்ளனர்.
ஆபத்து அவசரங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய இவ்வசதி, நிரந்தர நிதி அழுத்தத்தில் வாழும் குடும்பங்களுக்கு உயிர்நாடியாக மாறியுள்ளதை இது காட்டுவதாக, கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்ல்ஸ் சாந்தியாகோ வருணித்துள்ளார்.
பணத்தை மீட்பது இங்கு பிரச்னை அல்ல; காரணம் இது உயிர்வாழ்வதற்கான ஒரு பெரிய பிரச்னையின் அறிகுறியாகும்.
ஊதியங்கள் குறைவாக இருப்பதாலும், வாழ்க்கைச் செலவினம் அதிகரிப்பதாலும், மக்களால் முன்பு போல சேமிக்க முடியவில்லை; இதனால், அவர்கள் பணத்தை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
எனவே, மலேசியர்களுக்கு உண்மையான ஊதிய வளர்ச்சியும் வலுவான சமூகப் பாதுகாப்பு தேவையாகிறது; அதே சமயம், குறைந்த EPF சேமிப்பைக் கொண்டுள்ள உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தின் இலக்கு வைக்கப்பட்ட நிரப்புதல்களும் அவசியமாகும்.
இதன் மூலம் மக்கள் கௌரவத்துடன் வாழ முடியுமென சார்ல்ஸ் சொன்னார். அடிக்கடி EPF சந்தா விகிதங்களை நாம் மாற்றிக் கொண்டிருக்க முடியாது; மாறாக, பிரச்னையின் மையத்திலிருந்து அதனை நாம் சரிசெய்ய வேண்டும்;
அதாவது மலேசியர்கள் பணத்தைச் சேமிக்க அவர்களுக்கு போதுமான ஊதியம் வழங்கப்படவில்லை என்பதே உண்மை…
இது சரி செய்யப்படும் வரை, ஓய்வூதியம் ஒரு சிலருக்கு ஒரு சலுகையாகவே இருக்கும், அனைவருக்கும் உத்தரவாதமாக இருக்காது என சார்ல்ஸ் சுட்டிக் காட்டினார்.