அலோர் ஸ்டார், செப்டம்பர்-6 – Extreme sports எனப்படும் ஆபத்தான அதே நேரம் உற்சாகமான விளையாட்டில் பங்கேற்க வந்திருப்பதாகக் கூறிய பாகிஸ்தானியர்கள் குழுவொன்று, சொந்த நாட்டுக்கே திருப்பியனுப்பப்பட்டது.
நேற்று பிற்பகல் 2 மணிக்கு லங்காவி அனைத்துலக விமான நிலையம் வந்திறங்கிய 1 பெண் உள்ளிட்ட 29 பேரையும், குடிநுழைவுத் துறை சோதனையிட்டது.
தூபா தீவில் ( Pulau Tuba) நாளை நடைபெறவிருக்கும் தூபா குறுக்கோட்ட போட்டியில் (Tuba Cross Country Run) பங்கேற்க வந்திருப்பதாக அவர்கள் கூறினர்.
சந்தேகத்தில் விசாரித்ததில், விமானப் பயண டிக்கெட் உள்ளிட்ட செலவுகளுக்கு தலா இரண்டாயிரம் ரிங்கிட்டை அவர்கள் செலவுச் செய்திருப்பது தெரிய வந்தது.
ஆனால், அவர்கள் கூறிய போட்டிக்கான நுழைவுக் கட்டணமோ வெறும் 45 ரிங்கிட் தான்; போட்டியின் முதல் பரிசும் வெறும் 300 ரிங்கிட் மட்டுமே.
அவர்கள் விளையாட்டு உடையில் வந்திருந்தனர்; ஆனால், கொண்டு வந்த துணிப் பைகளில், அப்போட்டிக்குரிய ஆடைகளோ காலணிகளோ இல்லை.
மாறாக குர்தா மட்டுமே இருந்தது.
இதனால் குடிநுழைவுத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது.
போட்டி ஏற்பாட்டாளர்களிடம் விசாரித்தால், வெளிநாட்டு போட்டியாளர்கள் எவரும் இம்முறை பங்கேற்கவில்லை என கூறிவிட்டனர்.
ஆக, வந்தவர்களின் பேச்சும் செயலும் நம்பும்படியாக இல்லாத காரணத்தால், பாதுகாப்புக் கருதி அவர்களைத் திருப்பியனுப்ப முடிவுச் செய்யப்பட்டது.