
கோலாலம்பூர், மார்ச்-23-அனைத்துலகக் கால்பந்து சம்மேளனமான FIFA-வின் புதியத் தர வரிசையில் தேசியக் கால்பந்து அணியான ஹரிமாவ் மலாயா 14 இடங்கள் சரிந்துள்ளது.
இதற்கு முன் 121-ஆவது இடம் வரை முன்னேறியிருந்த தேசிய அணி, தற்போது 135-ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
2027 ஆசியக் கிண்ணக் கால்பந்து தகுதிச் சுற்று மற்றும் அனைத்துலக நட்புமுறை ஆட்டங்கள் தொடர்பில் ஹரிமாவ் மலாயா அண்மையில் புள்ளிக் குறைப்புக்கு ஆளானதே அதற்குக் காரணம்.
கடந்தாண்டு நேப்பாளத்திற்கு எதிராக 2-0 என வெற்றிப் பெற்ற ஆட்டத்திலும், வியட்நாமுக்கு எதிராக 4-0 என வெற்றிப் பெற்ற ஆட்டத்திலும் மலேசியா தகுதியற்ற ஆட்டக்காரர்களைக் களமிறக்கியதாக, AFC எனப்படும் ஆசியக் கால்பந்து சம்மேளனம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது.
அதற்கு தண்டனையாக, அவ்வெற்றிகள் இரத்துச் செய்யப்பட்டு 3-0 என தோல்விகண்டதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, 3 அனைத்துலக ஆட்ட முடிவுகளை FIFA இரத்துச் செய்து, அதே 3-0 என்ற தோல்வியை வழங்கியது.
இந்த பின்னடைவுகளே, தர வரிசையில் மலேசியாவின் பெரிய வீழ்ச்சிக்கு வித்திட்டுள்ளன.
இவ்வேளையில், உலகத் தர வரிசையில் முதலிடத்தில் ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயின், இரண்டாவது இடத்தில் உலக சம்பியன் அர்ஜேண்டினா, மூன்றாவது இடத்தில் பிரான்ஸ் ஆகியவை உள்ளன.



