
கோலாலம்பூர், மே 22 – Global Sumud Flotilla (GSF) 2.0 மனிதாபிமான பயணத்தில் பங்கேற்ற 29 மலேசியர்கள் பாதுகாப்பாக துருக்கி இஸ்தான்புல் (Istanbul) நகரைச் சென்றடைந்தனர்.
இவர்கள் சர்வதேச கடற்பரப்பில் இஸ்ரேல் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் ஹசான் (Datuk Seri Mohamad Hasan) கூறுகையில், கடந்த வியாழக்கிழமை அவர்கள் அனைவரும் இஸ்தான்புல் வந்தடைந்ததாக தெரிவித்தார்.
அனைவரும் நலமாக உள்ளனர் என்றும் அவர்களில் ஐந்து ஆண்கள் உட்பட ஆறு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மொத்தமாக 428 மனிதாபிமான செயற்பாட்டாளர்கள் இந்த மிஷனில் பங்கேற்றிருந்தனர்.
துருக்கி அதிபர், இஸ்ரேலில் இருந்த மனிதாபிமான செயற்பாட்டாளர்களை பாதுகாப்பாக அழைத்து வர Turkish Airlines நிறுவனத்தின் மூன்று விமானங்களை அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மலேசியர்களைக் கொண்ட குழு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை (KLIA) வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



