
தெஹ்ரான், மார்ச்-23-முக்கிய வணிகப் போக்குவரத்தான Hormuz நீரிணையைத் முழுமையாகத் திறந்து விடுமாறு அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்துள்ள நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என தெஹ்ரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
Hormuz பழையபடி திறக்கப்படா விட்டால் கடும் தாக்குதல் நடத்தப்பட்டு மொத்த ஈரானும் அழிந்துபோகும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஈரானிய அதிபர் Masoud Pezeshkian, “Hormuz நீரிணை அனைவருக்கும் திறந்தே உள்ளது…எங்கள் நிலத்தை சீண்டியவர்களைத் தவிர” என பளிச்சென கூறினார்.
மீறி தாக்குதல் நடந்தால் நீரிணையை முழுமையாக மூடுவோம் என்றும், வளைகுடா வட்டார எரிசக்தி வளங்களை முக்கிய இலக்காகக் கொண்டு தாக்கி அழிப்போம் என்றும் அவர் சூளுரைத்தார்.
உலக எண்ணெய் போக்குவரத்தின் சுமார் 20 விழுக்காடு இந்த நீரிணை வழியாகத் தான் செல்வதால், இந்த பதற்றம் உலகச் சந்தையில் எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளது.
இதனிடையே, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏவுகணை தாக்குதல்கள் தொடரும் நிலையில், பலர் காயமடைந்துள்ளனர்.
பேரழிவைத் தவிர்க்க உலக நாடுகள் சமாதானத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது…



