Latestமலேசியா

Hormuz நீரிணையில் அமெரிக்கக் கடற்படையின் முற்றுகையைத் தடுத்தால் ஈரான் படகுகளை மூழ்கடிப்போம்: ட்ரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், ஏப்ரல்-14-Hormuz நீரிணையில் அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை எதிர்க்கும் எந்தவொரு ஈரான் நாட்டுப் படகும் உடனடியாக அழிக்கப்படும் என, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நேற்று முறைப்படி தொடங்கிய நிலையில், தனது Truth Social சமூக வலைத்தளத்தில் ட்ரம்ப் ஈரானுக்கு இந்த நேரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

முற்றுகைப் பகுதிக்கு அருகே வரும் ஈரானியப் போர்க்கப்பல்கள் உடனடியாக சுட்டு வீழ்த்தி, மூழ்கடிக்கப்படும் என்றார் அவர்.

பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் எண்ணெய் வருவாயைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா இந்த முற்றுகையை மேற்கொண்டுள்ளது.

என்றாலும், Hormuz நீரிணை வழியாகச் செல்லும் ஈரானியக் கப்பல்கள் மட்டுமே தடுக்கப்படும்; ஈரான் அல்லாத மற்ற வணிகப் கப்பல்கள் மறிக்கப்படாது என அமெரிக்கக் கடற்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஈரான் கடற்படையின் பெரும்பகுதி ஏற்கனவே அழிக்கப்பட்டு விட்டதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், ஈரானின் “வேகப்படைப் படகுகள்” (Fast attack ships) அமெரிக்கக் கடற்படையை நெருங்கினால் அவை ‘நரகத்திற்கு’ அனுப்பப்படும் என ஆக்ரோஷமாகப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைக் “கடல் கொள்ளை” என வருணித்துள்ள ஈரான், இதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள மற்ற துறைமுகங்களைத் தாக்குவோம் என மிரட்டல் விடுத்துள்ளது.

இந்த மோதலால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை நெருங்கியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!