
புத்ராஜெயா, ஏப்ரல்-8,தேசிய ஒருமைப்பாட்டு ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனமான, IKLIN, நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் ஒற்றுமைக்கான சிறப்பு மையமாக தரமுயர்த்தப்படவுள்ளது.
13-ஆவது மலேசியத் திட்டத்திற்கு ஏற்ப, நடப்புச் சவால்களைச் சமாளிக்க உயர் தாக்கம் கொண்ட திட்டமாக இது அமைவதாக, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் கூறினார்.
இதன் ஒரு பகுதியாக, தேசிய ஒருமைப்பாடு, இனங்களுக்கு இடையேயான உறவுகள் மற்றும் வெறுப்பை விதைக்கும் கருத்துக்களை ஆய்வு செய்யும் உயர்தர ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும் என்றார் அவர்.
தவிர, அரசாங்கத்தின் கொள்கை வடிவமைப்புக்கு ஆதரவாக வியூகப் பகுப்பாய்வு மற்றும் ஆலோசனைகளை வழங்கும் முக்கிய மையமாகவும் IKLIN செயல்படும்.
அதோடு, “ஒற்றுமைக்கான சமூகப் பொறியியலாளர்கள்” எனப்படும் புதிய மனித மூலதன மேம்பாட்டு திட்டமும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இவர்கள் சமூக மாற்றத்திற்காக அடிமட்டத்தில் இறங்கி செயல்படுவார்கள் என அமைச்சர் சொன்னார்.
இம்முயற்சியானது, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் முன்னேற்றகரமான நாட்டை உருவாக்கும் மடானி அரசாங்கத்தின் கடாப்பட்டைப் பிரதிபலிப்பதாக ஏரன் கூறினார்.
ஒற்றுமையே, அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் நலனுக்கான முக்கிய அடிப்படை என்று அமைச்சர் வலியுறுத்தினார்.



