
புத்ரா ஜெயா, ஏப் 14 – KTMB எனப்படும் மலேயன் ரயில்வே பெர்ஹாட் நிறுவனத்தின் மின்சார ரயில் சேவை (ETS) மற்றும் எக்ஸ்பிரஸ் ரக்யாட் திமுரான் (ERT) கட்டணங்களில் 30 விழுக்காடு கழிவு வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர்அந்தோனி லோக் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை, ரயில் பயணிகளின் எண்ணிக்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிக்கவும், தேசிய எரிபொருள் நுகர்வைக் குறைக்கவும் அரசாங்கம் வகுத்துள்ள பரந்த உத்தியின் ஒரு பகுதியாகவும் அமைகிறது.
தற்போதைய தரவுகளின்படி, திங்கள் முதல் வியாழன் வரையிலான நாட்களில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள் காலியாக இருப்பதால், இந்தத் கழிவு குறிப்பாக அந்நாட்களை இலக்காகக் கொண்டது என்று லோக் கூறினார்.
வார நாட்களில் எங்கள் ரயில்களில் மூன்றில் ஒரு பங்கு காலியாகவே உள்ளன.
மேலும் பலரை ETS- ரயில் சேவையை பயன்படுத்த ஊக்குவிக்கவும், இந்தக் கொள்ளளவை நிரப்பவும், நாங்கள் கட்டணத்தில் 30 விழுக்காடு கழிவை வழங்குகிறோம் என்று லோக் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் அக்டோபர் 14 ஆம்தேதிவரையிலான பயணக் காலத்திற்கு, ஏப்ரல் 15 ஆம்தேதி முதல் ஏப்ரல் 30 ஆம்தேதிவரை JB Sentral – Tumpat – JB Sentral வழித்தடத்திற்கான எக்ஸ்பிரஸ் ரக்யாட் திமுரான் (ERT) சேவைக்கும் இந்தக் கட்டணக் குறைப்பு பொருந்தும். இருப்பினும், பள்ளி விடுமுறை நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களில் இந்தத் தள்ளுபடி பொருந்தாது.



