
பெட்டாலிங் ஜெயா, ஜூலை-16-மலேசியாவின் அடுத்த தமிழ் இசை நட்சத்திரத்தைக் கண்டறிந்து, அவர்களை இசைத்துறையில் நல்வழிப்படுத்தும் நோக்கில், “வணக்கம் வாய்ஸ் 2026” (Vanakkam Voice 2026) எனும் பிரமாண்ட தேசிய அளவிலான தமிழ் பாடல் திறன் தேடல் போட்டி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வணக்கம் மலேசியாவின் OTT தகவல் பொழுதுபோக்குத் தளமான ‘வணக்கம் மேக்ஸ்’ ஏற்பாட்டில், ‘வணக்கம் மலேசியா’ மற்றும் முன்னணி தேயிலை நிறுவனமான ‘BOH Malaysia’ ஆகியவற்றின் பேராதரவுடன் இப்போட்டி நடத்தப்படுகிறது.
பெட்டாலிங் ஜெயா, India Gate உணவகத்தில் நடைபெற்ற இந்த அறிமுக விழாவில், திரளான கலைத்துறை மற்றும் ஊடகப் பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களும் பங்கேற்கக்கூடிய இப்போட்டிக்கான இணையப் பதிவு, வரும் ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை திறந்திருக்கும்.
அறிமுக விழாவில் சிறப்புரையாற்றிய வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குநர் தியாகராஜன் முத்துசாமி, இது வெறும் பாடல் போட்டி மட்டுமல்லாமல், இளம் கலைஞர்களின் திறமையை வளர்த்து அவர்களது இசைக்கனவுகளை நனவாக்கும் ஒரு உன்னதத் தளம் என்று பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து, இந்தத் திறன் தேடலில் இணைந்துள்ள முதன்மை ஆதரவாளர் மற்றும் ஆலோசகர் இம்முயற்சியின் நோக்கம் குறித்துத் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்தத் தேசிய அளவிலான மேடையில் தங்களின் குரல் வளத்தை நிரூபிக்கவிருக்கும் இளம் இசை அமைப்பாளரும் இயக்குனருமான Zithiesh மற்றும் Batik Air விமான நிறுவனத்தின் தொடர்பு – விளம்பரப் பிரிவு அதிகாரியான சுரேஷ் வானன் ஆகியோர் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெறும் போட்டியாளர்களுக்குத் தொழில்முறை குரல் வளம் மற்றும் இசைப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, உள்ளரங்க ஒலிப்பதிவு அனுபவத்துடன் அவர்கள் அரையிறுதி மற்றும் பிரமாண்ட இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவர்.
மலேசியத் தமிழ் இசை உலகிற்குப் புதிய பரிமாணத்தைக் கொண்டு சேர்க்கவிருக்கும் “வணக்கம் வாய்ஸ் 2026”, உள்ளூர் கலைஞர்களின் வாழ்வில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல் விவரங்களுக்கு வணக்கம் மலேசியாவின் அனைத்து வலைத்தளங்களையும் பார்வையிடுங்கள், பதிவு செய்து உங்கள் திறமையை வெளிகாட்டுங்கள்!



