
சுங்கை பட்டாணி, ஜூலை-16-கெடா, கோலா மூடாவில் மாவட்ட Zakat அலுவலகத்தின் முன், ஆயுதம் எனச் சந்தேகிக்கப்படும் கூர்மையான பொருளைக் கொண்டு தமது தாயாரை மிரட்டியதாகக் கூறப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாவலராகப் பணி புரியும் 30 வயது மதிக்கத்தக்க அந்த சந்தேக நபர், நேற்று வைரலான அச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாக கோலா மூடா மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் Hanyan Ramlan தெரிவித்தார்.
விசாரணைக்கு உதவும் வகையில் தடுத்து வைக்கப்படுவதற்கான அனுமதியைப் பெற அவர் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
தாயார் என நம்பப்படும் மூதாட்டியை சந்தேக நபர் உண்மையிலேயே மிரட்டினாரா அல்லது தாக்கினாரா என்பது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. சம்பவம் தொடர்பான தகவல் அல்லது பதிவுகள் இருந்தால், விசாரணைக்கு உதவ முன் வருமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வேளையில், சோதனையில், சந்தேக நபருக்கு இதற்கு முன் குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை. சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் எந்த ஆயுதங்களையும் காவல்துறை இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளதாக Hanyan மேலும் கூறினார்.



