
சிலாங்கூர், ஜூலை 16 – ரவாங், கம்போங் பாரு குண்டாங்கில் (Kampung Baru Kundang) மதுபோதையில் அண்டை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, கூர்மையான ஆயுதத்தால் இரு அண்டை வீட்டாரை தாக்கிய ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் இப்ராஹிம் ஹுசின் (Assistant Commissioner Ibrahim Husin) கூறுகையில், ஜூலை 11ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகவும், ஜூலை 12ஆம் தேதி இது தொடர்பாக புகார் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஆரம்ப விசாரணையில், சந்தேகநபர் மதுபோதையில் வீட்டின் முன்புறத்திற்குள் அத்துமீறி நுழைந்து தகராறு ஏற்படுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்களை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக தெரியவந்துள்ளது. இதில் காயமடைந்த இருவர் சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சில பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



