
லங்காவி, ஜூலை-17-லங்காவியில் மழலையர் பள்ளியொன்றில் குழந்தைகள் அலட்சியமாக நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பில் காவல் துறை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.
வைரலான காணொளியொன்று மற்றும் அப்பள்ளியின் முன்னாள் ஆசிரியை கொடுத்த புகாரின் அடிப்படையில் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக லங்காவி மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் Khairul Azhar Nuruddin தெரிவித்தார்.
பணி நீக்கப்பட்ட அந்த ஆசிரியை அப்பள்ளியில் குழந்தைகளைக் கையாளுவதில் பல முறை அலட்சியமும் கவனக்குறைவும் நிகழ்ந்துள்ளதாகக் கூறியதாக அவர் தெரிவித்தார்.
குழந்தைகள் மெத்தைகள் இல்லாமல் தரையில் தூங்க விடப்பட்டதாகவும், பல குழந்தைகள் கழிப்பறையில் பூட்டி வைக்கப்பட்டதாகவும் அந்த ஆசிரியை குறிப்பிட்டார்.
எனினும் தங்கள் குழந்தைகள் காயமடைந்ததாகவோ அல்லது துன்புறுத்தலுக்கு ஆளானதாகவோ இதுவரை எந்தப் பெற்றோரும் புகார் அளிக்கவில்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
அவ்வகையில் CCTV காட்சிகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அச்சம்பவம் விசாரிக்கப்படுவதாக Khairul கூறினார்.
நான்கு வெவ்வேறு அறைகளில் சில குழந்தைகள் தரையில் படுத்துக் கொண்டு சொந்தமாகப் பால் புட்டிகளில் பால் குடித்துக் கொண்டிருந்த காட்சிகள் அடங்கிய காணொளி முன்னதாக சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டிருந்தது.
சம்பந்தப்பட்ட மழலையர் பள்ளியில் குழந்தை பராமரிப்பு முறைகள் குறித்து பல இணையவாசிகள் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.



