அர்ஜென்டினாவுக்கு சிறப்பு சலுகை இல்லை – மெஸ்ஸி பதிலடி

நியூயோர்க், ஜூலை 17 – உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா முன்னேறியது நடுவர்களின் உதவியால் அல்ல, அணியின் கடின உழைப்பு மற்றும் போராட்ட மனப்பான்மையால்தான் என லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) தெரிவித்துள்ளார்.
அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 0-1 என பின்தங்கியிருந்த அர்ஜென்டினா, இறுதிக் கட்டத்தில் இரண்டு கோல்கள் அடித்து 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் அந்த அணி ஸ்பெயினை சந்திக்கவுள்ளது.
அர்ஜென்டினாவுக்கு நடுவர்கள் சாதகமாக செயல்படுகிறார்கள் என்றும், உலக காற்பந்து அமைப்பு அந்த அணிக்கு ஆதரவளிக்கிறது என்றும் சிலர் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இதற்கு பதிலளித்த மெஸ்ஸி, கடந்த நான்கு ஆண்டுகளாக தாங்கள் சிறந்த அணிகளில் ஒன்றாக இருப்பதாகவும் தங்களின் வெற்றி கடின உழைப்பின் பலன் என்று குறிப்பிட்டார். மேலும் தங்களுக்கு எந்தச் சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை, என்றும் தெரிவித்தார்.
அர்ஜென்டினா பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனியும் (Lionel Scaloni) இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். VAR தொழில்நுட்பம் இருக்கும் நிலையில் ஒரு அணிக்கு உதவுவது எளிதல்ல என்றும், அர்ஜென்டினாவுக்கு எந்தவித ஆதரவும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.



