Latestமலேசியா

‘தர்மா மடானி‘: 627 இந்து கோவில்களுக்கு RM12.54 மில்லியன் ஒதுக்கீடு – ரமணன்

புத்ராஜெயா, ஜூலை.15-இவ்வாண்டு ஜனவரி முதல் இதுவரையில் ‘தர்மா மடானி‘ திட்டத்தின் கீழ் அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட 627 இந்துக் கோயில்களுக்கு 12.54 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது. அத்தொகையானது மூன்று கட்டங்களை உள்ளடக்கியிருப்பதாக மனித வள அமைச்சர் Datuk Seri R. ரமணன் கூறியிருக்கிறார்.

முதல் கட்டத்தின் கீழ், ஜனவரியில் 162 இந்துக் கோயில்களுக்கு 3.24 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டத்தின் கீழ் 5.94 மில்லியன் ரிங்கிட் விநியோகிக்கப்பட்டு மேலும் 297 கோயில்கள் பயனடைந்தன. அடுத்து மூன்றாம் கட்டத்தின் கீழ், 168 கோவில்களுக்கு மொத்தம் RM3.36 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பின் மூலம், கோவில்கள் சமய வகுப்புகள், ஆளுமை வளர்ச்சி முகாம்கள் மற்றும் பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்களை ஏற்பாடு செய்து, சமூக மையங்களாகத் தொடர்ந்து சேவையாற்ற முடியும் என ரமணன் நம்பிக்கை தெரிவித்தார். அவரது உரையை மனித வள அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் Sutekno Ahmad Belon மடானி திட்ட நிகழ்வின் தொடக்க விழாவில் வாசித்தார்.

இவ்வேளையில், மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவு MITRA மூலம் RM10 மில்லியன் ஒதுக்கீட்டுடன் ஆரம்பக் கல்வி மானிய உதவித் திட்டம் (Celik MADANI) வழி இந்திய சமூகத்திற்கான கல்வி ஆதரவை அரசாங்கம் வலுப்படுத்தி வருகிறது. இவ்வாண்டு அத்திட்டத்தில் பங்கேற்க 162 மழலையர் பள்ளிகளுக்கு மொத்தம் RM8.87 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பி40 இந்தியக் குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 3,612 குழந்தைகள் இதன் வாயிலாக நேரடியாகப் பயனடைவார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் RM230 வரை மானியம் வழங்கப்படும்.

இவ்வேளையில், பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தலைமையிலான மடானி அரசாங்கம், இந்திய சமூகத்திற்கு எதுவும் செய்யவில்லை அல்லது நிதியை வழங்கவில்லை என சில தரப்பினர் கூறி வருவதை ரமணன் மறுத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!