
கோலாலம்பூர், நவம்பர்-28,இராணுவப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் கும்பல் தொடர்பில், மேலுமோர் ஆகாயப் படை அதிகாரியும் 4 பொது மக்களும் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, இவ்வழக்கில் இதுவரை கைதானவர்களின் எண்ணிக்கை 18-டாக உயர்ந்துள்ளது.
சபா, தாவாவில் பணியாற்றும் 29 வயதுடைய அந்த ஆகாயப் படை அதிகாரி, சுபாங் விமானப்படைத் தளத்தில் கைதானார்.
அதனைத் தொடர்ந்து கிள்ளான் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 3 உள்நாட்டு ஆடவர்களும் சீன நாட்டுப் பிரஜை ஒருவரும் கைதுச் செய்யப்பட்டனர்.
இதுவரை கைதானவர்களில் 8 பேர் விமானப்படை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆவர்.
கைதுச் செய்யப்பட்ட 18 பேரில் எண்மர் மீது கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரிலுள்ள நீதிமன்றங்களில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் ஐவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, சுபாங் விமானப்படைத் தளத்தில் 4.83 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 96.64 கிலோ கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இக்கடத்தல் நடவடிக்கை அம்பலமானது.
அக்கும்பலின் மூளையாகச் செயல்பட்டவர்களையும் இதர நபர்களையும் அடையாளம் காணும் விசாரணை தொடர்வதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.



