
தமிழ் ஊடகத்துறையில் தனக்கென ஓர் இடத்தைப் பதித்துள்ள வணக்கம் மலேசியா, தற்போது திரைப்படத் துறையிலும் வளர்ந்து வரும் கலைஞர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் மற்றுமொரு முயற்சியை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, வணக்கம் மலேசியாவின் வணக்கம் மேக்ஸ் Ott தளத்தின் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்ட குறும்படப் போட்டி 2026-இன் பரிசளிப்பு விழா, நவம்பர் 25ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இளம் தலைமுறையினரின் படைப்பாற்றல், கதை சொல்லும் திறன் மற்றும் திரைப்பட உருவாக்கும் ஆற்றலை வெளிக்கொணரும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இப்போட்டி, வளர்ந்து வரும் திரைப்படக் கலைஞர்களுக்கு ஒரு புதிய வாய்ப்புக் களமாக அமைந்தது.
இந்நிகழ்ச்சியில் தொடர்புத் துறை அமைச்சர் தியோ நீ சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமான Finas-இன் முன்னாள் தலைவர் டத்தோ கமில் ஒத்மான், வணக்கம் மலேசியாவின் இயக்குநர் தியாகராஜன் முத்துசாமி, செய்திப் பிரிவுத் தலைவர் வேதகுமாரி வெங்கடேசன், சந்தைப் பிரிவுத் தலைவர் ஜெகநாதன் ஆகியோரும் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்றனர்.
வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு வெறும் போட்டி வாய்ப்பை வழங்குவதோடு நின்றுவிடாமல், அவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிவகுப்பதே இம்முயற்சியின் முக்கிய நோக்கம் என வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குநர் எம். தியாகராஜன் முத்துசாமி தெரிவித்தார்.
ஏறக்குறைய 60 குறும்படங்கள் பல்வேறு கதைக்களங்கள், சமூகச் சிந்தனைகள் மற்றும் தனித்துவமான படைப்பாக்கங்களுடன் இப்போட்டியில் பங்கேற்றன. அந்த 60 குறும்படங்களிலிருந்து சிறந்த 10 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றிலிருந்து இறுதிச் சுற்றில் சிறந்த மூன்று வெற்றிப் படைப்புகள் அறிவிக்கப்பட்டன.
முதல் பரிசாக 10,000 ரிங்கிட், கோப்பையையும் தட்டிச் சென்றது Vip Views திரைப்பட தயாரிப்பில் உருவான Deka குறும்படம். இந்த குறும்படம் ஒரு சராசரி இந்தியக் குடும்பம் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள், போராட்டங்கள் மற்றும் கடினமான சூழல்களை உணர்வுபூர்வமாகச் சித்தரித்த குறும்படமாகப் பலரின் கவனத்தை ஈர்த்தது. இப்படம் வெற்றி பெற்றது குறித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொண்டார் அப்பட இயக்குநர் Deevan Raj Pathipan.
மேலும், Infinova Pictures தயாரிப்பில், இரண்டாம் பரிசாக 6,000 ரிங்கிட், கோப்பையும் வென்றது Paranoia எனும் குறும்படம். குறும்பட குழுவினரும் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து, மூன்றாம் பரிசாக 4,000 ரிங்கிட் , கோப்பையும் வென்ற Nalaiya Theerpu தயாரிப்பில் உருவான Naanga Naalu Per குறும்பட அணியினரும் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்தனர்.
ஏனைய வெற்றிப் படைப்புகளும் தங்களின் தனித்துவமான கதைக்களம் மற்றும் படைப்பாற்றலால் ஐந்து குறும்படங்களுக்கு ஆறுதல் பரிசுகளும், இரண்டு படைப்புகளுக்கு நடுவர்களின் சிறப்பு அங்கீகாரமும் வழங்கப்பட்டன. அனைவரும் தங்களின் கதைகள், மற்றும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொண்டனர்.
இப்போட்டியின் நடுவர்களாக இயக்குநரும் நடிகருமான சி.குமரேசன் மற்றும் இயக்குநர் கார்த்திக் ஷாமளன் ஆகியோர் செயல்பட்டு, படைப்புகளின் தரம் மற்றும் கலைத்திறனை அடிப்படையாகக் கொண்டு வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர்.
இதற்கிடையில், நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தொடர்புத் துறை அமைச்சர் தியோ நீ சிங், சமீபத்தில், இந்திய திரையினருக்கு பல வெற்றிகள் கிடைப்பதைச் சுட்டிக் காட்டிய அவர், இளம் தலைமுறையினர் தங்களுக்குக் கிடைக்கும் இதுபோன்ற வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, திரைப்படத் துறையில் தங்களின் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், வளர்ந்து வரும் கலைஞர்கள் எதிர்காலத்திலும் இதுபோன்ற பல்வேறு வாய்ப்புகளைப் பெற்று, தங்களின் படைப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதேவேளையில், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல பிரமுகர்களும் வணக்கம் மலேசியாவின் இந்த முன்னெடுப்பைப் பெரிதும் பாராட்டினர். குறிப்பாக, புதிய கலைஞர்களின் படைப்புகளுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதுடன், அவர்களின் உழைப்புக்கும் திறமைக்கும் உரிய அங்கீகாரம் வழங்கும் இத்தகைய முயற்சிகள் தமிழ் திரைப்படத் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்நிகழ்ச்சியில், மூத்த திரைப்படக் கலைஞர்களான கே. எஸ். மணியம், சாரதா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள், தொழில்முனைவர்கள், ஊடகவியலாளர்கள், போட்டியாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் ஊடகத்துறையில் தனது பயணத்தை விரிவுபடுத்தி வரும் வணக்கம் மலேசியா, தற்போது வணக்கம் மேக்ஸ் Ott தளத்தின் மூலம் புதிய படைப்பாளர்களுக்கும் வாய்ப்பளிக்கும் தளமாகத் தன்னை நிலைநிறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



