
கோலாலம்பூர், நவம்பர் 27– கோலாலம்பூர் நகர மையமான KLCC பகுதியில் நேற்று இரவு எந்தவொரு தாக்குதல் அல்லது அவசரச் சம்பவமும் நடைபெறவில்லை. அங்கு பாதுகாப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் குவிக்கப்பட்டது அவசரகால ஒத்திகைக்காகவே என போலீசார் தெரிவித்தனர்.
டாங் வாங்கி மாவட்டக் காவல்துறைத் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் அஹ்மட் அஸ்வான் அமின் நோர்டின் (Ahmad Azwan Amin Nordin) கூறுகையில், ஆபத்தான அவசரச் சூழல்களை எதிர்கொள்ளும் போலீசாரின் தயார்நிலை, விரைவான நடவடிக்கை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திறனைச் சோதிக்க இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.
இந்தப் பயிற்சியில் போலீசாருடன் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM), சுகாதார அமைச்சு (KKM), மலேசிய குடிமைத் தற்காப்புப் படை (APM), கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL), தெனாகா நேஷனல் (TNB) ஆகிய ஐந்து அமைப்புகளும் இணைந்தன.
இதற்கிடையில், KLCC பகுதியில் அவசரநிலை ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பவோ, பகிரவோ வேண்டாம் என போலீசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டனர்.



