Latest

உலக எரிபொருள் விலை அழுத்தம் – மின் கட்டணச் சுமையைக் குறைக்க TNB நடவடிக்கை

கோலாலம்பூர், நவ. 26 – உலகச் சந்தையில் எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், மின் கட்டணச் சுமையைக் குறைக்க அரசாங்கத்துடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) தெரிவித்துள்ளது.

2026 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை, வீடுகளுக்கான மின் கட்டணப் பாதுகாப்பு வரம்பு மாதம் 600 கிலோவாட் மணியிலிருந்து 800 கிலோவாட் மணியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 80 லட்சத்துக்கும் அதிகமான வீட்டு மின் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்றும், இதற்கான செலவில் 150 மில்லியன் ரிங்கிட் வரை TNB ஏற்கும் என்றும் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

முன்னதாக, 2026 மே முதல் ஆகஸ்ட் வரை தானியங்கி எரிபொருள் கட்டணச் சரிசெய்தல் (AFA) முறையின் கீழ் விதிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தைக் குறைக்க அரசாங்கம் 435 மில்லியன் ரிங்கிட் வழங்கியது. 2025 ஜூலை முதல் 2026 ஏப்ரல் வரை, இதே முறையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 3.1 பில்லியன் ரிங்கிட் கட்டணத் தள்ளுபடி வழங்கப்பட்டது.

myTNB செயலியின் Energy Budget வசதி மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் மாதாந்திர மின் பயன்பாட்டைக் கண்காணித்துத் திட்டமிடலாம். நேர அடிப்படையிலான கட்டண முறைக்குத் தகுதியுள்ளவர்கள், மின் தேவை குறைவான நேரங்களில் மின்சாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் செலவைக் குறைக்கலாம்.

வீடுகளுக்கு நம்பகமான மின்சாரமும், வணிகங்களின் வளர்ச்சிக்குத் தேவையான எரிசக்தியும் கிடைப்பதை உறுதி செய்வது TNB-யின் பொறுப்பு என அதன் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான டத்தோஸ்ரீ Ir. Ts. ஷம்சுல் அஹ்மத் தெரிவித்தார்.

செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் நாட்டின் மின் தேவை 8.3 விழுக்காடு உயர்ந்து 108.2 டெராவாட் மணியாகப் பதிவானது. அதே காலகட்டத்தில், மின்விநியோகத்தை மேம்படுத்தும் திட்டங்களில் TNB 9.1 பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்தது. தேசிய மின்பரிமாற்றப் பாதை, திரெங்கானுவில் மின்கலச் சேமிப்பு அமைப்பு, பேராக் மாநிலம் லுமூட்டில் எரிவாயு முனையம் ஆகியவை இதில் அடங்கும்.

கல்வி, சமூக மேம்பாடு, விளையாட்டு உள்ளிட்ட திட்டங்களுக்கு TNB 186 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியது. ஜகாத் வக்காலா மூலம் 60,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 10.6 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டது. இதே ஒன்பது மாதக் காலத்தில் நிறுவனத்தின் வருவாய் 50.1 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 53.9 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்தது.

TNB, World Branding Awards விழாவில் Brand of the Year 2026–2027 விருதையும், Enlit Asia விழாவில் Power Utility of the Year விருதையும் பெற்றது. அதன் myTNB செயலிக்கு, PC.com Readers’ Choice Awards 2026 விழாவில் Best Public Utility App விருது கிடைத்தது.

ஆசியாவின் முன்னணி மின்சார நிறுவனங்களில் ஒன்றான TNB, மலேசியாவில் 1.1 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் வழங்குகிறது. தீபகற்ப மலேசியாவில் அதன் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திறன் 3.5 கிகாவாட்டாக உள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!