Latestமலேசியா

நேபாளப் பேரிடர்: 54 மலேசியக் குடும்பங்களுக்கு 540,000 ரிங்கிட் நிதியுதவி! – கைகொடுத்த மடானி அரசு

கோலாலம்பூர், நவ. 25-நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுப் பேரிடரால் பாதிக்கப்பட்ட 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலாகக் கைகொடுத்துள்ளது மடானி அரசாங்கம்!

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 10,000 ரிங்கிட் வீதம், மொத்தம் 540,000 ரிங்கிட் சிறப்பு நிதியுதவியை அரசாங்கம் வழங்கியுள்ளது.

இந்த நிதியுதவியை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், அரசாங்கத்தின் சார்பில் இன்று பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரதிநிதிகளிடம் வழங்கினார்.

கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் அமைந்துள்ள பெர்கேசோ தலைமையகத்தில் இந்த நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுப் பேரிடரைத் தொடர்ந்து, 54 மலேசியக் குடிமக்களை இதுவரை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த இக்கட்டான சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலன், தேவைகளைக் கவனிப்பதற்கான பொறுப்பை மனிதவள அமைச்சிடம் அமைச்சரவை ஒப்படைத்தது.

கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவைத் தொடர்ந்து, மித்ரா, பாதிக்கப்பட்ட 54 குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டது.அதன் தொடர்ச்சியாகவே இன்று இந்த நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் மனிதவள அமைச்சின் செயல்பாட்டுப் பிரிவுக்கான துணைச் செயலாளர் சுடெக்னோ பின் அகமது பெலோன், கொள்கை – சர்வதேசப் பிரிவுக்கான துணைச் செயலாளர் டாக்டர் முகமது ஷஹாரின் பின் உமர், பெர்கேசோ தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் பின் அசீஸ் முகமது, தேசியப் பதிவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ பத்ருல் ஹிஷாம் பின் அலியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், மித்ரா தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர், வெளியுறவு அமைச்சு, நிதி அமைச்சு, தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா), மனிதவள அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரதிநிதிகள், அவர்களின் பேச்சாளர் டாக்டர் ஆர்.மணிவண்னன் உட்பட ஊடகவியலாளர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தனித்து விடப்படவில்லை என்பதை உணர்த்தும் வகையில், அவர்களுக்கு நிதியுதவி வழங்கிய மடானி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அமைந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!