
கோலாலம்பூர், நவம்பர்-28,நாட்டின் பிரபல அரசியல் ஆய்வாளரும் சமூக ஆர்வலருமான Dr சந்திரா முசாஃபார், தமது 79-ஆவது வயதில் நேற்று காலமானார்.
அனைத்துலக நீதிக்கான இயக்கமான JUST அமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த அவரது மறைவை, அவ்வமைப்பு உறுதிப்படுத்தியது.
1947-ஆம் ஆண்டு கெடா, பெடோங்கில் பிறந்த சந்திரா முசாஃபார், மனித உரிமைகள், சமூக நீதி மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் ஆவார்.
1977-ஆம் ஆண்டு ALIRAN சமூகச் சீர்திருத்த இயக்கத்தைத் தோற்றுவித்த அவர், 1991-ஆம் ஆண்டு வரை அதன் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
1987-ஆம் ஆண்டு Operasi Lalang நடவடிக்கையின் போது, ISA எனப்படும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைதுச் செய்யப்பட்டிருந்தார்.
தற்போதைய கெஅடிலான் கட்சியின் முன்னோடியான Parti KeADILan Nasional-லின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவருமான அவர், 1999 முதல் 2001 வரை அதன் முதல் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
மலாயாப் பல்கலைக்கழகம் மற்றும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்திலும் கல்விப் பணியாற்றிய அவர், அனைத்துலக அரசியல் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாகப் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
அன்னாரின் இறுதிச் சடங்கு தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என JUST அமைப்பு தெரிவித்துள்ளது.



