
புத்ராஜெயா, நவ. 27 – தமிழ்ப்பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக மித்ராவின் கல்வி நிதி கல்வி அமைச்சுக்கு வழங்கப்படுவதாக ஓர் அரசியல் கட்சியின் தலைவர்கள் கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது, தீய நோக்கம் கொண்டது, மக்களைத் தவறாக வழிநடத்தக்கூடியது என மித்ரா மறுத்துள்ளது.
கட்டடம் கட்டுதல், பராமரிப்பு, பழுதுபார்த்தல், புதுப்பித்தல் அல்லது தரம் உயர்த்துதல் போன்ற உட்கட்டமைப்புப் பணிகளுக்கு மித்ரா நிதி ஒதுக்கப்படுவதில்லை என்று மலேசிய இந்தியர் சமூக உருமாற்றப் பிரிவு (மித்ரா) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மாறாக, இந்திய சமூகத்தினருக்கு நேரடியாகப் பயனளிக்கும் கல்வித் திட்டங்கள், நடவடிக்கைகள் மற்றும் தலையீடுகளுக்காகவே அந்த நிதி ஒதுக்கப்படுவதாக அது விளக்கியது.
மலேசியக் கல்வி அமைச்சு மற்றும் யயாசான் டிடிக் நெகாராவுடன் இணைந்து, இந்திய சமூகத்தினரின் மனிதவள மேம்பாட்டை மையமாகக் கொண்டு மித்ரா பல்வேறு கல்வித் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், குறிப்பாகத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், குழந்தைகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இத்திட்டங்கள் உதவுவதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.
அவற்றில், 3,853 குழந்தைகளுக்கான தொடக்கக் கல்வியை மையமாகக் கொண்ட Celik MADANI திட்டமும், 10,395 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மலாய், ஆங்கிலம், அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் பயிற்றுவிப்பதுடன் மதிய உணவும் வழங்கும் Kalvi MADANI திட்டமும் அடங்கும்.
மேலும், 361 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 14 வகையான தளவாடப் பொருட்கள் வழங்குதல், 388 தமிழ்ப்பள்ளிகளுக்கு 400 திறன்பலகைகள் வழங்குதல், எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். மாணவர்களுக்கான தமிழ் மொழிச் சிறப்புக் கருத்தரங்குகள், Kelas Tuisyen Madani பயிற்சி வகுப்புகள் ஆகியவையும் செயல்படுத்தப்படுவதாக மித்ரா தெரிவித்தது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு 5,000 மடிக்கணினிகள் வழங்கும் Peranti Madani உதவியும், முதலாம் ஆண்டு மாணவர்கள் 5,000 பேருக்கு தலா ரி.ம.2,000 வழங்கும் Siswa Madani சிறப்பு உதவியும் திட்டங்களில் இடம்பெற்றுள்ளன.
மித்ராவின் கல்வி நிதியைத் தமிழ்ப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதியாகச் சித்தரிப்பது உண்மையைத் திரித்துக் கூறுவதாகும் என அறிக்கை சுட்டிக்காட்டியது. திட்டங்களின் நோக்கம், செயலாக்க முறை மற்றும் பதிவுகளைப் பரிசீலிக்காமல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது பொறுப்பற்ற செயல் என்றும், அது நிறுவனத்தின் நம்பகத்தன்மையையும் இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்கான அரசாங்க முயற்சிகளையும் பாதிக்கக்கூடும் என்றும் தெரிவித்தது.



