
கோலாலம்பூர், நவம்பர்-27,இந்தியப் பிரஜைகளுக்கான விசா விலக்குச் சலுகையை 2027-ஆம் ஆண்டு டிசம்பர் வரை நீட்டிக்குமாறு மலேசிய ஹோட்டல்கள் சங்கம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இந்தியப் பிரஜைகளுக்கு மீண்டும் விசா கட்டாயமாக்கப்படுவது, சுற்றுப் பயணிகளின் வருகையைப் பாதிக்கக்கூடும் என அச்சங்கம் கவலைத் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு இந்தியாவிலிருந்து 1.57 மில்லியன் சுற்றுப் பயணிகள் மலேசியாவுக்கு வருகை புரிந்துள்ளனர்.
அது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 14.6 விழுக்காடு அதிகமாகும்.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 738,000 இந்தியச் சுற்றுப் பயணிகள் நாட்டுக்கு வருகை புரிந்துள்ளனர்.
எனவே, விசா கட்டாயமாக்கப்பட்டால், இந்தியச் சுற்றுப் பயணிகள் எளிதான நுழைவு நடைமுறைகளைக் கொண்ட பிற நாடுகளைத் தேர்வு செய்யக்கூடும் என அச்சங்கத்தின் தலைவர் கிறிஸ்டினா தோ எச்சரித்தார்.
அது ஹோட்டல்களின் வருமானம், வேலை வாய்ப்புகள், சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறைகள் ஆகியவற்றையும் பாதிக்கக்கூடும் என்றார் அவர்.
எனவே, விசா விலக்குச் சலுகையைத் தவறாகப் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் அதேவேளையில், உண்மையான சுற்றுப் பயணிகளுக்குத் தடைகளை ஏற்படுத்தாத தீர்வை அரசாங்கம் காண வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
2027 ஜனவரி முதலாம் தேதி முதல் இந்தியக் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் மலேசியாவுக்குள் நுழைய விசா அவசியம் என கடந்த நவம்பர் 17-ஆம் தேதி குடிநுழைவு இலாகா அறிவித்திருந்தது.
அதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் முதலாம் தேதி முதல் MyVISA இணையத்தளம் வாயிலாகச் சமர்ப்பிக்கலாம்.
மலேசியாவில் வேலை தேடுவதற்காக விசா விலக்குச் சலுகையைத் தவறாகப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இந்தியத் தூதரகம் முன்னதாக எச்சரித்திருந்தது.
அவர்களில் பலர் போலியான வேலைவாய்ப்பு வாக்குறுதிகளை வழங்கும் முகவர்களால் ஏமாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.



