
கோலாலம்பூர், ஜூலை-16-கோலாலம்பூரில் ஜாலான் துவாங்கு அப்துல் ஹாலிம் பகுதியில் இரண்டு சிறிய குதிரைகள் சாலையில் சுற்றித்திரிந்ததால் வாகனமோட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விபத்துகளைத் தவிர்க்க போக்குவரத்து போலீசாரும் பொதுமக்களும் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
இன்ஸ்டாகிராமில் வெளியான காணொளியில், சாலையோரம் சுற்றித்திரிந்த குதிரைகளால் வாகனங்கள் மெதுவாகச் சென்றதையும், ஐந்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் வாகனங்களை வேறு வழியில் இயக்கி பாதுகாப்பு வளையம் அமைத்ததையும் காண முடிந்தது.
மேலும், ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் புல்லைக் காட்டி குதிரைகளை சாலையிலிருந்து விலக்க முயன்றார். மற்றொருவர் கயிறு மூலம் அவற்றைப் பிடிக்க முயன்றாலும், குதிரைகள் தப்பிச் சென்றன.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் வரை போலீசார் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்தனர். உயரமான கட்டிடங்களும் பரபரப்பான போக்குவரத்தும் நிறைந்த அந்தப் பகுதியில் குதிரைகள் சுற்றித்திரிந்த காட்சி, அப்பகுதியாகச் சென்ற பலரின் கவனத்தை ஈர்த்தது.



