
ஷா ஆலம், ஜூலை 16 – புதிதாகப் பிறந்த தனது பெண் குழந்தையை கொன்றதாகக் கூறப்படும் 23 வயதான மாதுவை போலீசார் இன்று ஷா ஆலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அந்தப் பெண்ணுக்கு எதிராக மலேசிய தண்டனைச் சட்டத்தின் கீழ் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, அவர் அதைப் புரிந்துகொண்டதாகத் தெரிவித்தார். ஆனால், இது உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கு என்பதால், அவரிடம் குற்றஒப்புதல் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த ஜூலை 7ஆம் தேதி சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில், தான் பெற்றெடுத்த பெண் குழந்தையின் மரணத்திற்கு காரணமானதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மரண தண்டனை வழங்கப்படாவிட்டால், குறைந்தது 12 பிரம்படி தண்டனையும் விதிக்கப்படும்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு அக்டோபர் 23ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்படும்.



