
கோலாலாம்பூர், ஜூலை-31- இந்திய, சீன சமூகங்கள் குறிப்பாக குறைந்த வருமானம் பெறுவோரின் தேவைகள் 13-ஆவது மலேசியத் திட்டத்தில் புறக்கணிக்கப்படாது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.
அவர்களின் கல்வி, தொழில்முனைவு மற்றும் வீடமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான அணுகுமுறையை அரசாங்கம் தயார் செய்யுமென்றார் அவர்.
இந்தியச் சமூகத்தின் தொழில் வாய்ப்புகள் மேம்படுத்தப்படும்.
அதற்காக, அறிவியல்-தொழில்நுட்பம்-பொறியியல்-கணிதம் ஆகியத் துறைகளை உள்ளடக்கிய STEM மற்றும் TVET எனப்படும் தொழில் பயிற்சி மற்றும் தொழில் கல்வி உள்ளிட்ட கல்வி மற்றும் திறமை மேம்பாட்டு முயற்சிகளும் திட்டங்களும் செயல்படுத்தப்படும்.
அதே சமயம் இந்தியர்களின் வீடமைப்புப் பிரச்னைகளுக்கு உரிய கவனம் செலுத்தப்பட்டு அவை மேம்படுத்தப்படும்,
இந்தியச் சமூகத்தை நிர்வகிப்பதும் வலுப்படுத்தப்படுமென்றார் அவர்.
சீனர்களின் புதிய கிராம மேம்பாட்டு பெருந்திட்டத்தின் வாயிலாக புதிய கிராமங்களின் சமூக பொருளாதார நிலை வலுப்படுத்தப்படும்.
இதில் தொழில்முனைவோருக்கான நிதி ஆதரவு மற்றும் அங்காடி வியாபாரிகளுக்கான தளங்களை மேம்படுத்துவதும் அடங்கும்.
அரசாங்கத்தின் ஐந்தாண்டு காலத் திட்டமான 13-ஆவது மலேசியத் திட்டத்தை இன்று மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றிய போது அன்வார் அவ்வாறு கூறினார்.