கோலாலம்பூர், டிசம்பர்-2, பயணிகளுக்கான குடிநுழைவுச் சோதனைகளை விரைப்படுத்த ஏதுவாக, KLIA-வில் QR குறியீடுகளின் பயன்பாட்டை அறிமுகப்படுத்த, அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
அந்த ஆக்கப்பூர்வமான புதிய முறையின் வாயிலாக, தங்களின் சுயவிவரங்கள் மற்றும் பயண விவரங்கள் அடங்கிய QR குறியீட்டை பயணிகள் scan செய்தாலே போதும்.
இதன் மூலம் குடிநுழைவுச் சோதனை முகப்பிடங்களில் குறிப்பாக உச்ச நேரங்களின் போது நெரிசலைக் குறைக்க முடியுமென, உள்துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr ஷாம்சுல் அனுவார் நசாரா ( Datuk Seri Dr Shamsul Anuar Nasarah) கூறினார்.
பாதுகாப்பு அம்சங்களைப் பலப்படுத்தவும் இந்த QR குறியீடுகள் உதவுமென்றார் அவர்.
விரைவில், கடல் மற்றும் ஆகாய மார்க்க எல்லைப் பகுதிகளில் உள்ள நாட்டின் மற்ற நுழைவாயில்களுக்கும் இந்த QR குறியீடு விரிவுப்படுத்தப்படும்.
மேலும் ஒருங்கிணைந்த இந்த முறையானது, குடிநுழைவுத் துறையின் நிர்வாக மேலாண்மை ஆற்றலை மேம்படுத்துவது மட்டுமின்றி, குடிநுழைவு முகப்பிடங்களில் ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகளைத் தடுக்க உதவும் என்றார் அவர்.
வெளிநாட்டு சுற்றுப் பயணிகளின் வருகையை எளிதாக்க, நாட்டின் நுழைவாயில்களில் சேவைத்தரத்தை மேம்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சி குறித்து, மக்களவையில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் கேட்ட கேள்விக்கு துணையமைச்சர் பதிலளித்தார்.