
கோலாலம்பூர், ஜூலை 29 – நேற்றிரவு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) ஒன்பது வெளிநாட்டு விலங்குகளை கடத்த முயன்ற பெண்ணை எல்லை கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் வெற்றிகரமாக கைது செய்துள்ளனர்.
நெகிரி செம்பிலானைச் சார்ந்த அந்த 36 வயதுடைய உள்ளூர் பெண் விலங்குகளை மறைத்து வைத்துக் கொண்டு மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஹைதராபாத்திற்கு புறப்படும் சமயத்தில் அதிகாரிகளிடம் வசமாக சிக்கியுள்ளார்.
நான்கு சியாமாங்ஸ், ஒரு குரங்கு மற்றும் நான்கு சர்க்கரை கிளைடர்கள் என சந்தேகிக்கப்படும் ஒன்பது காட்டு விலங்குகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த விலங்குகள் சட்டவிரோத சர்வதேச வர்த்தகத்திற்காக கடத்தப்பட்டது என்றும் இதன் மதிப்பு 127,000 ரிங்கிட் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இக்குற்றம் தொடர்பான மேல் விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் வான்வெளி வழியாக வனவிலங்கு கடத்தல் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராட KLIA விமானப் பாதுகாப்பு (AVSEC) குழுவுடன் ஒருங்கிணைந்த ஆய்வுகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.