Latestமலேசியா

’kopi சுட்டுக் கொலை; பெசூட் நகராண்மைக் கழகத்தை நீதிமன்றத்துக்கு இழுத்த விலங்கு ஆர்வலர்கள்

பெசூட், டிசம்பர்-16 – திரங்கானு, பெசூட்டில் ‘kopi எனும் வைரல் நாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், பெசூட் நகராண்மைக் கழகமான MDB-க்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Kartini Farah Abd Rahim, எஸ்.முகுணன், Hong Hai San, எஸ். ஷஷி குமார் ஆகிய 4 விலங்கு நல ஆர்வலர்கள், குவாலா திரங்கானு உயர் நீதிமன்றத்தில் அவ்வழக்கைப் பதிவுச் செய்தனர்.

MDB மற்றும் திரங்கானு மாநில அரசை முறையே முதல் மற்றும் இரண்டாவது பிரதிவாதிகளாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

‘kopi’ கொல்லப்பட்டது, 2015 விலங்குகள் நலச் சட்டத்தின் பிரிவு 29(e)-யின் கீழ் தவறு என அறிவிக்க வேண்டும் என அந்நால்வரும் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பெசூட் நகராண்மைக் கழகம் சுடும் ஆயுதத்தைப் பயன்படுத்தி ‘kopi’-யை சுட்டதும் சட்டத்திற்கு எதிரானது என நீதிமன்றம் அறிவிக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.

அவசர நிலைமை அல்லது நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காக இல்லாமல், வேறெந்த காரணத்திற்காகவும் நாய், பூனை அல்லது வேறெந்த பிராணிகளையும் சுடும் ஆயுதங்களால் கொல்லக் கூடாது என்பதை நீதிமன்றம் இடித்துரைக்க வேண்டுமென்றும் அந்நால்வரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

முன்னதாக தன்னைப் போன்று ஆதரவின்றி கிடந்த பூனைக் குட்டியை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்து விளையாடி வைரலான ‘kopi நாய், திடீரென சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடளாவிய நிலையில் பெரும் கண்டனத்தைப் பெற்றது.

எனினும், பொது மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே பாதுகாப்புக் காரணங்களுக்காக ‘kopi’ சுட்டுக் கொல்லப்பட்டதாக பெசூட் நகராண்மைக் கழகம் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!