
கோலாலம்பூர், ஆகஸ்ட்-15,KPKT எனப்படும் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங், 2026-ஆம் ஆண்டுக்கான மலேசிய பசுமைக் கட்டடக் கூட்டமைப்பின் நிலையான நகரங்களுக்கான தலைமைத்துவ விருதை (MalaysiaGBC Leadership in Sustainable Cities Award 2026) பெற்றுள்ளார்.
நீடித்த நகர மேம்பாட்டை மேம்படுத்துவதிலும், பசுமையான, மீள்தன்மை கொண்ட மற்றும் வாழத்தக்க நகரங்களை உருவாக்குவதிலும் அவரது தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், கோலாலம்பூரில் நேற்றிரவு இவ்விருது வழங்கப்பட்டது.
விருது ஏற்புரையில், இந்த அங்கீகாரம் அமைச்சு, ஊராட்சி மன்றங்கள், தொழில்துறை பங்காளிகள் மற்றும் சமூகங்களின் கூட்டு முயற்சியைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்ட அவர், வீடமைப்பு, பொது இடங்கள் மற்றும் நகர நிர்வாகங்களில் நிலைத்தன்மை ஒரு முக்கிய தூணாக மாற வேண்டும் என வலியுறுத்தினார்.
சுத்தமான காற்று, பசுமையான இடங்கள், சிறந்த வீடுகள் மற்றும் வலுவான சமூகங்களை நோக்கிய ஒரு புதுப்பிக்கப்பட்ட கடப்பாடாகவும் இந்த விருது அமைவதாக ஙா கோர் மிங் கூறினார்.
இவ்வேளையில், KPKT-யின் முக்கிய முன்னெடுப்புகளான, 2026–2035 தேசிய வீடமைப்புக் கொள்கை, அடுத்த 10 ஆண்டுகளில் 1,000 மடானி பொழுதுபோக்கு பூங்காக்களை (MADANI Recreational Parks) உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல், வீடமைப்பு விநியோகத்தை அதன் தேவைகளுடன் சிறப்பாகப் பொருத்துவதற்கு அடுத்த ஆண்டு பெரிய தரவுப் பகுப்பாய்வுக் கருவியை அறிமுகப்படுத்தும் திட்டங்கள் ஆகியவற்றையும் அமைச்சர் பட்டியலிட்டார்.
அதே சமயம், கழிவு மேலாண்மையைப் பொறுத்தவரை, 2050-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 18 கழிவு-ஆற்றல் (Waste-to-Energy) நிலையங்களை மலேசியா இலக்காகக் கொண்டுள்ளது.
இதன் மூலம் 600 மெகாவாட் வரையிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும் என்றார் அவர்.



