
பெட்டாலிங் ஜெயா, ஜூலை-19- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, பெட்டாலிங் ஜெயாவில் ஒரு வீட்டில் சோதனையிடச் சென்ற போது, வீட்டின் உரிமையாளர் செய்த காரியம் அதிகாரிகளைத் திகைப்படையச் செய்தது.
அதிகாரிகள் வருவது தெரிந்ததும், ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் சுமார் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 100 ரிங்கிட் பண நோட்டுகளுக்கு அவர் தீ வைத்து விட்டதே அதற்குக் காரணம்.
கதவைத் திறந்த போதே, வீட்டினுள் கரும்புகை கிளம்பியது அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
புகை வந்த வழியே சென்று பார்த்த போது, பாதி எரிந்தும் எரியாமலும் 100 ரிங்கிட் பண நோட்டுகள் குளியறையில் கண்டெடுக்கப்பட்டன.
இது தவிர, பல தலையணை பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7.5 மில்லியன் ரிங்கிட் பணத்தையும் சோதனைக் குழு கண்டுபிடித்தது.
அதோடு, Rolex, Omega, Cartier உள்ளிட்ட 3 சொகுசு கடிகாரங்கள், மோதிரங்கள், தங்க நாணயங்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன.
தரவு மைய கட்டுமானத் திட்டத்தின் டெண்டர் கொள்முதல் தொடர்பில் லஞ்சம் வாங்கிய சந்தேகத்தில், MACC அந்தத் திட்ட மேலாளர் வீட்டில் சோதனை நடத்தியது.
இந்நிலையில் அவ்வாடவர் கைதான வேளை, கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களும் MACC-யின் மேல் விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.