Latestமலேசியா

MACC-யின் மன்னிப்பை நிராகரித்த தியோ பெங் ஹோக் குடும்பத்தார்

கோலாலம்பூர், ஜூலை-17- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC கேட்ட மன்னிப்பை, தியோ பெங் ஹோக் (Teoh Beng Hock) குடும்பத்தார் நிராகரித்துள்ளனர்.

“MACC-யின் அச்செயல் உள்ளபடியே எங்களை மேலும் வருத்தமடையச் செய்கிறது. எங்களுக்கு தேவை அவர்களின் மன்னிப்பு அல்ல, மாறாக மர்மமான மரணத்திற்கு நீதியே” என பெங் ஹோக்கின் தங்கை தியோ லீ லான் (Teoh Lee Lan) கூறினார்.

MACC வழங்க முன்வந்துள்ள இழப்பீட்டையும் நிராகரிப்பதாக நேற்றைய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்த லீ லான், அண்ணனின் மரணத்திற்கு தொடர்ந்து நீதி கேட்போம் என திட்டவட்டமாகக் கூறினார்.

பெங் ஹோக் உயிரிழந்த 16-ஆம் ஆண்டு நினைவு நாளில், MACC நேற்று மாலை அவரின் குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கேட்டது.

அதோடு, பெங் ஹோக் பிள்ளைகளின் நலன் மற்றும் கல்விச் செலவுகளுக்கு பயன்படுத்த ஏதுவாக, ஒரு குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்கவும் அவ்வாணையம் முன்வந்தது.

அச்சம்பவம் ஒரு கருப்புப் புள்ளி என வருணித்த MACC, அதனை படிப்பினையாகக் கொண்டு சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் உறுதியளித்தது.

2009-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் நாள் ஷா ஆலாம், பிளாசா மாசாலாம் (Plaza Masalam) கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் பெங் ஹோக் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

அதற்கு முதல் நாள் இரவு அங்கு 14-ஆவது மாடியிலிருந்த MACC அலுவலகத்தில் அவர் பல மணி நேரங்கள் வாக்குமூலம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!