
கோலாலம்பூர், ஆஸ்ட்-17- புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநராக டத்தோ எம். குமார் நியமிக்கப்பட்டதை, DAP-யின் Malaysian Malaysia கொள்கையுடன் தொடர்புப் படுத்தி பேசியதை, சமூக ஆர்வலரும் பெரிக்காத்தான் நேஷனல் கட்சியைச் சேர்ந்தவருமான Chegubard மீட்டுக் கொள்ள வேண்டும்.
உரிமைக் கட்சியின் இடைக்காலத் துணைத் தலைவர் டேவிட் மார்ஷல் அதனை வலியுறுத்தியுள்ளார். அக்கூற்றில் உண்மையில்லை; காரணம் DAP-யே அதனை மறந்து போய் நீண்ட நாட்கள் ஆகிறது.
‘மலேசியர்களுக்கான மலேசியா’ என்ற DAP-யின் கோஷம் இந்திய – சீன வாக்காளர்களை மயக்குவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது ஆட்சி அதிகாரத்திற்காக அதனை அக்கட்சி கைவிட்டு விட்டு ‘புதிய மலேசியா’ என புகழ்பாடுகிறது.
எனவே, குமார் நியமனத்தில் DAP-யின் பங்கு இருந்திருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை என டேவிட் மார்ஷல் கிண்டலாகக் கூறினார்.
எது எப்படி இருப்பினும், குமாரின் நியமனம் முழுக்க முழுக்க தகுதி அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனை விமர்சனம் செய்ய வேண்டியதில்லை என்றார் அவர்.
சீனர்களும் இந்தியர்களும் இன்னமும் உண்மையான Malaysian Malaysia நாட்டை பார்க்க விரும்புகின்றனர்; ஆனால் அது DAP பாணியிலான அரசியல் கோஷம் அல்ல என டேவிட் மார்ஷல் சாடினார். என்ற போதிலும் பூமிபுத்ராக்களின் சிறப்புரிமைகளை நாம் மதிக்கிறோம்; அவற்றை என்றுமே கேள்வி எழுப்பியதில்லை.
நாங்கள் கேட்பதெல்லாம், இந்தியர்களும் சீனர்களும் நாடற்றவர்கள் போல் நடத்தப்படக் கூடாது என்பது தான் என அறிக்கை வாயிலாக டேவிட் கூறினார்.
Chegubard-டின் பேச்சுக்கு உரிமை கட்சி கண்டனம் தெரிவிக்காமல் இருப்பதை, பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் சம்புநாதன் முன்னதாக சாடியிருந்த நிலையில், டேவிட் பதிலடி கொடுத்துள்ளார்.