பத்து பஹாட், செப்டம்பர்-24 – தொடர்பு-பல்லூடக ஆணையத்தின் (MCMC) அதிகாரி மற்றும் போலீஸ் அதிகாரி என ஆள்மாறாட்டம் செய்தவர்களின் பேச்சை நம்பி, சுமார் 3 லட்சம் ரிங்கிட் பணத்தை இழந்துள்ளார் ஜோகூர், பத்து பஹாட்டைச் சேர்ந்த 61 வயது முதியவர்.
செம்பனைத் தோட்டக்காரரான அவர், முதலில் SKMM அதிகாரி எனக் கூறிக் கொண்ட பெண்ணிடமிருந்து அழைப்பைப் பெற்றுள்ளார்.
பின்னர் திரங்கானு போலீஸ் அதிகாரி எனக் கூறிக் கொண்டவரிடம் அழைப்பு மாற்றப்பட்டது.
அதில், வங்கிக் கணக்கு மோசடியில் தாம் ஈடுபட்டிருப்பதாகவும், விசாரணை முடியும் வரை அனைத்து சொத்துக்களும் முடக்கி வைக்கப்படுமென்றும் அவரிடம் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்ற படியேற வேண்டுமென்பதோடு, விசாரணை என்றப் பெயரில் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளில் பணத்தைப் போடுமாறும் அவர் பணிக்கப்பட்டார்.
இதனால் பயந்துப் போன அம்முதியவர், செப்டம்பர் 6 முதல் 15 வரை 6 வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் கட்டம் கட்டமாக மொத்தம் 290,000 ரிங்கிட்டைப் போட்டுள்ளார்.
கடைசியில் தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து பாரிட் சூலோங் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.