கோலாலம்பூர், நவம்பர்-29, MLFF எனப்படும் வேகமாக செல்லும் பல வழி பாதை முறையிலான டோல் கட்டண வசூலிப்பை நடைமுறைப்படுத்துவதில், அரசாங்கம் 3 சவால்களை அடையாளம் கண்டுள்ளது.
நிர்வாக அமைப்பு முறையை இறுதிச் செய்வதும் அவற்றிலடங்கும் என, பொதுப் பணித் துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி (Alexander Nanta Linggi) கூறினார்.
அதன் அமுலாக்கம் பல்வேறு தரப்பினரை உட்படுத்தியுள்ளது; குறிப்பாக ஒவ்வொரு நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளதாக அவர் சொன்னார்.
மற்றொரு முக்கியச் சவால், நடப்பிலுள்ள சட்டத்தைத் திருத்துவது அல்லது புதியச் சட்டத்தை இயற்றுவதாகும்.
MLFF அமுலாக்கம் காணும் போது, டோல் கட்டணத்தைச் செலுத்தாமல் போகும் நெடுஞ்சாலைப் பயனீட்டாளர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுப்பதென்பதை முடிவுச் செய்ய வேண்டுமென்றார் அவர்.
MLFF அமுலாக்கத்திற்கு அமைச்சரவை கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனங்களுடன் அமைச்சு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
டிசம்பர் 16 வாக்கில் பேச்சுவார்த்தை முடியுமென எதிர்பார்க்கப்படுவதாக, நந்தா லிங்கி சொன்னார்.
MLFF முறையின் கீழ், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைகளின் அனைத்துப் பாதைகளும் தடையில்லா பாதைகளாக மாற்றப்படும்.
அதாவது, கட்டண வசூலிப்பு சாவடியில் வரிசைக் கட்டி நிற்கத் தேவையின்றி வாகனமோட்டிகள் மின்னியல் கட்டண முறைக்கு மாறி வேகமாகப் பயணத்தைத் தொடரலாம்.