
புத்ராஜெயா, ஏப்ரல்-9-மானியங்களை மேலும் ஆக்ககரமாக வழங்க புதிய முறையை அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாக, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.
அவ்வகையில் MyKad மற்றும் MyKasih முறைகளைப் பயன்படுத்தி, இலக்கிடப்பட்டோருக்கு மானியங்களை வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக அவர் சொன்னார்.
இந்த பரிந்துரை தற்போது நிதி அமைச்சால் ஆய்வு செய்யப்படுகிறது.
ஆய்வறிக்கை பின்னர் அமைச்சரவையின் பார்வைக்குக் கொண்டுச் செல்லப்படும் என்றார் அவர்.
தேசியப் பொருளாதார நடவடிக்கை மன்றத்தின் கலந்துரையாடலில் இந்த யோசனை வந்ததாகவும், உண்மையில் உதவி தேவைப்படுவோருக்கு மானியம் சென்றடைவதை உறுதிச் செய்வதே இதன் நோக்கம் என்றும் ஃபாஹ்மி கூறினார்.
MyKad பயன்பாட்டின் மூலம் ஏற்கனவே சில எரிபொருள் மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய முறை மேலும் மேம்பட்டதாக இருக்கும்.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், மானிய விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையும் திறமையும் அதிகரிக்கும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.



