
புத்ராஜெயா – ஜூலை-15 – 5 மாநிலங்களில் பழைய இரும்பு சாமான்களைக் கடத்தும் கும்பலுக்கு எதிரான மாபெரும் சோதனை நடவடிக்கையில், 183 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
3 பங்களா வீடுகள், _penthouse_ ஆடம்பர குடியிருப்பு, கடைத் தொகுதி, நிலங்கள், செம்பனைத் தோட்டம், சொகுசு கார்கள், ஆடம்பர கை கடிகாரங்கள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும். இது தவிர, சுமார் 51 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 45 நிறுவன வங்கிக் கணக்குகள் மற்றும் 82 தனிநபர் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி அதனை உறுதிப்படுத்தினார். MACC-யுடன் சுங்கத் துறை, உள்நாட்டு வருவாய் வாரியம், பேங்க் நெகாரா ஆகியவை ஒருங்கிணைந்து இந்த Op Metal சோதனையை மேற்கொண்டன.
இவ்வேளையில், நேற்றைய சோதனைகளில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இன்று பினாங்கு, கெடா, ஜோகூர், மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் 13 புதிய இடங்களைக் குறி வைத்து சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், இந்த பழைய இரும்பு சாமான் கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருந்த அனைத்து தரப்பையும் தமது தரப்பு அடையாளம் கண்டு வருவதாக அசாம் பாக்கி சொன்னார்.
பழைய இரும்பு சாமான்களுக்கும் _e-waste_ எனப்படும் மின்னணுக் கழிவுப் பொருட்களுக்கும் இக்கும்பல் ஏற்றுமதி வரி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு கடத்தி வந்ததன் மூலம், ஆறாண்டுகளில் அரசாங்கத்திற்கு 950 மில்லியன் ரிங்கிட் வருமான இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.