
கோலாலம்பூர், ஜூலை-11 – OPR வட்டி விகிதத்தில் 25 புள்ளிகளைக் குறைத்து 2.75 விழுக்காடாக நிர்ணயித்துள்ள பேங்க் நெகாரா, அதனை மேலும் குறைக்காது என்றே தோன்றுவதாக பெரும்பாலான பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் கணித்துள்ளன.
எனவே ஆண்டிறுதி வரை 2.75 விழுக்காட்டிலேயே அது நிலைநிறுத்தப்படுமென அவை எதிர்பார்க்கின்றன.
கோவிட் காலத்துக்குப் பிறகு முன் முறையாக இந்த OPR குறைக்கப்பட்டுள்ளதானது, இவ்வாண்டின் இரண்டாவது அரையாண்டில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் பொருளாதார அழுத்தங்களைச் சமாளிப்பதற்காகும்.
இந்நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் புவிசார் அரசியல் உள்ளிட்ட வெளிப்புற அம்சங்களின் தாங்கக்கங்களால் தொடரும் நிச்சயமற்ற சூழலில், OPR-ரில் மாற்றமிருக்காது என Maybank Investment Bank கூறுகிறது.
MPS எனப்படும் பணவியல் கொள்கை அறிக்கை, மலேசியப் பொருளாதாரத்தின் தொடர் வளர்ச்சியை வலியுறுத்துகிறது; உள்நாட்டு தேவையின் போட்டியிடும் ஆற்றலால் அவ்வளர்ச்சி உந்தப்படுமென எதிர்பார்க்கப்படுவதையும் அது சுட்டிக் காட்டியது.
இவ்வேளையில், இவ்வாண்டின் இரண்டாவது பாதியில் KDNK எனப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தி சற்று மெந்தமான வளர்ச்சியைப் பதிவுச் செய்யும் என்ற கணிப்பின் காரணமாகவே, OPR குறைக்கப்பட்டிருப்பதாக MIDF Research கருதுகிறது.
மலேசியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 விழுக்காடு வரி அமுலுக்கு வரவிருப்பதும் semiconductor போன்ற முதன்மைத் துறைகளில் காணப்படும் மந்த நிலையும் KDNK-வின் மந்தநிலைக்குக் காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இவ்வேளையில், நாட்டின் KDNK வளர்ச்சி 4 முதல் 5 விழுக்காடு என்ற வட்டத்திற்குள் நீடிக்கும் வரை, இவ்வாண்டுக்கு மேற்பட்டும் OPR விகிதம் 2.75 விழுக்காடில் நீடிக்குமென, RHB Research கணித்துள்ளது.