
கோலாலாம்பூர், நவம்பர்-14, சமூகப் பாதுகாப்பு நிறுவனமான PERKESO-வின் சீர்திருத்தங்களின் முதுகெலும்பாக ஊடகங்கள் மாறி வருவதாக, KESUMA எனப்படும் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் பாராட்டியுள்ளார்.
குறிப்பாக 10 முக்கிய சீர்திருத்தங்கள் குறித்த தகவல்களை மக்களுக்குச், கொண்டுச் சேர்ப்பதில் உள்ளூர் ஊடகங்கள் பெரும் பங்காற்றி வருவதாக அவர் சொன்னார்.
PERKESO-வின் புதியத் திட்டங்களான LINDUNG 24/7, LINDUNG Kerja சட்டத் திருத்தம் போன்ற சீர்திருத்தங்கள் அவற்றில் முக்கியமானவை.
இதே போல் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையில் நல்லதொரு பாலமாக விளங்கி, PERKESO-வின் முயற்சிகளுக்கு ஊடகங்கள் தொடர்ந்து ஆதரவு வழங்கி வர வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
நேற்றிரவு கோலாலாம்பூரில் நடைபெற்ற ‘iLINDUNGu 2025 PERKESO ஊடக விருது வழங்கும் விழா’வைத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது, அமைச்சர் அவ்வாறு சொன்னார்.
PERKESO வாரியத் தலைவர் டத்தோ ஸ்ரீ சுபஹான் கமால், PERKESO குழும நிர்வாகத் தலைவர் டத்தோ ஸ்ரீ மொஹமட் அஸ்மான் அசிஸ் மொஹமட் உள்ளிட்ட பிரமுகர்களும் அதில் பங்கேற்றனர்.
ஊடகங்களின் முக்கிய விருந்தினர்களில் ஒருவராக வணக்கம் மலேசியா நிர்வாக இயக்குநர் எம். தியாகராஜனும் கலந்துகொண்டார்.
சிறந்த தொலைக்காட்சி செய்தி, சிறந்த வானொலி செய்தி, சிறந்த போட்காஸ்ட், சிறந்த மின்னியல் ஊடக செய்தி, சிறந்த பத்திரிகை செய்தி, சிறந்த புகைப்பட செய்தி என 7 பிரிவுகளில் ஊடகங்களுக்கு அதில் விருதுகள் வழங்கப்பட்டன.



