
ஷா ஆலம், ஜனவரி-24-ம.இ.கா விரைவிலேயே அதன் மத்திய செயலவைக் கூட்டத்தைக் கூட்டி, பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக சேருவது தொடர்பில் இறுதி முடிவெடுக்கவுள்ளது.
அக்கூட்டத்துக்கு தாம் தலைமை தாங்கவிருப்பதாக, தேசியத்தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் இன்று உறுதிப்படுத்தினார்.
கூட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார் அவர்.
பெரிக்காத்தானில் சேருவதற்கான ம.இ.காவின் விண்ணப்பம் கடந்தாண்டு இறுதியிலேயே ஏற்கப்பட்டதாகவும், இப்போது முடிவு அக்கட்சியின் கையில் தான் உள்ளது என்றும், முன்னாள் பிரதமர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் முன்னதாக கூறியிருந்தது தொடர்பில் கேட்டபோது, விக்னேஸ்வரன் அவ்வாறு கூறினார்.
கடந்த நவம்பரில் நடைபெற்ற ம.இ.காவின் 79-ஆவது பொதுப்பேரவையில் புதிய கூட்டணிகளை ஆராய்வதற்கான அதிகாரம் மத்திய செயலவைக்கு வழங்கப்பட்டதால், தேசிய முன்னணியிலிருந்து அக்கட்சி விலகும் வாய்ப்பு குறித்த யூகங்கள் அதிகரித்தன.
ஆனால் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ சாம்ப்ரி அப்துல் காடிரோ, ம.இ.கா இன்னமும் பாரிசானின் உறுப்புக் கட்சி தான் எனக் கூறியிருந்தார்.
எனினும், முஹிடினின் பேச்சுக்குப் பிறகு மீண்டும் களம் பரபரப்பாகியுள்ளது.
தைப்பூசத்திற்குப் பிறகு தனது எதிர்காலம் குறித்த திடமான முடிவை ம.இ.கா அறிவிக்கும் வரை, யூகங்கள் ஓயாது என்பது மட்டும் நிச்சயம்.



