கோம்பாக், நவம்பர்-18 – PTPTN கடன்கள் மிக மந்தமாகத் திருப்பிச் செலுத்தப்படும் பட்டப்படிப்புகளுக்கு, இனியும் கடனுதவி வழங்குவதில்லை என்ற உத்தேசப் பரிந்துரை குறித்து அனைவரும் பொறுமைக் காக்க வேண்டும்.
அந்த தேசிய உயர் கல்வி நிதிக்கழகம் அதிகாரப்பூர்வமாக எதனையும் அறிவிக்கும் முன், நாமாக ஒரு முடிவுக்கு வரக் கூடாதென உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாம்ரி அப்துல் காடிர் (Datuk Seri Dr Zambry Abdul Kadir) கேட்டுக் கொண்டார்.
எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அனைத்து அம்சங்களையும் நன்காராய்ந்த பிறகே PTPTN அறிவிக்கும்.
படிப்பை முடித்து ஆண்டுக் கணக்காகியும் அறவே கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்போரும் உண்டு; வேலைப் போனதால் கடனைத் திருப்பிச் செலுத்துவதை பாதியிலேயே நிறுத்தியவர்களும் உண்டு.
இது போன்ற பல சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டுதான் PTPTN முடிவெடுக்கும் என்றார் அவர்.
PTPTN கடன் வசூலிப்பு மந்தமாக இருக்கும் பட்டப்படிப்புகளுக்கான கடனை நிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அதன் நிர்வாகத் தலைவர் டத்தோ அஹ்மாட் டாசுக்கி அப்துல் மஜிட் (Ahmad Dasuki Abdul Majid) கூறியிருந்தார்.
அப்போதாவது கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டுமென்ற பொறுப்பு அவர்களுக்கு வருமே என்ற எதிர்பார்ப்பில் அவ்வாறு யோசிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் மேற்படிப்புக்காக PTPTN இதுவரை 74 பில்லியன் ரிங்கிட்டுக்கு கடனுதவி வழங்கியுள்ளது.